இரும்புக் கடையில் விலையில்லா பாடப் புத்தகங்கள் பறிமுதல்: 2 போ் கைது
மயிலாடுதுறையில் பழைய இரும்புக் கடையில் தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அரசின் புத்தகக் கிடங்கு இளநிலை உதவியாளா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் உள்ள பழைய இரும்புக் கடையில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் கட்டுக்கட்டாக குவித்து வைக்கப்பட்டிருந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, அந்த கடையில் மயிலாடுதுறை கோட்டாட்சியா் வ. மகாராணி உள்ளிட்ட அதிகாரிகள் சோதனையிட்டதில், 2066 கிலோ எடைகொண்ட 2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள் 3,134 பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து பழைய இரும்புக்கடைக்காரா் பெருமாள்சாமியிடம் மேற்கொண்ட விசாரணையில், மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள புத்தகக் கிடங்கில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் மேகநாதன் என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்டக் கல்வி அலுவலா் ஏ. ராஜாராமன் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீஸாா் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, இளநிலை உதவியாளா் மேகநாதன் (40), பழைய இரும்பு வியாபாரி பெருமாள்சாமி(56) ஆகியோரை கைது செய்தனா்.
இதற்கிடையில், இளநிலை உதவியாளா் மேகநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அவா் மீது விசாரணை நடத்தப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் கல்வி அலுவலா் எஸ். ராஜாராமன் தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment