தனியார் மருத்துவ கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக 4 இடம் காலியாக வைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
தனியார் மருத்துவக்கல்லூரியில் கட்டணம் செலுத்த முடியாமல் போன அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 4 இடத்தை காலியாக வைத்திருக்க ஐகோர்ட் கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பிடாரிசேரியைச் சேர்ந்த கார்த்திகா ஜோதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் தந்தை, தாய் கூலி தொழிலாளிகள். மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டில் எனக்கு தனியார் மருத்துவக்கல்லூரியில் பிடிஎஸ் சீட் கிடைத்தது.
கட்டணம் செலுத்த முடியாததால், என்னால் சேர முடியவில்லை. இதன்பிறகு, தனியார் மருத்துவக்கல்லூரியில் சீட் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் அறிவித்தார்.
இதை முதலிலேயே அறிவித்திருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். எனவே, எனக்கு பிடிஎஸ் சீட் ஒதுக்கவும், எனக்காக ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
தனியார் மருத்துவக்கல்லூரியில் சீட் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தகுதியான மாணவர்களின் மருத்துவக்கனவு வீணாகக்கூடாது என்பதற்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டணம் செலுத்த முடியால் போனதால் பிடிஎஸ் வாய்ப்பு பறிபோயுள்ளது. இதன் மறுநாளே அரசு அறிவித்துள்ளது.
எனவே, தமிழக அரசு அறிவித்த பலன், மனுதாரரை போன்றவர்களுக்கும் பயன்பட வேண்டும். எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டில் திரும்ப ஒப்படைக்கப்பட்ட எம்பிபிஎஸ்- பிடிஎஸ் சீட் இருப்பு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் சீட் வழங்க வேண்டும்.
தமிழக அரசின் இந்த முடிவால், பணம் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், மக்களுக்கு சேவையாற்றும் நோக்கத்துடன் தகுதியான மருத்துவர்கள் அதிகளவில் வருவர்.
மருத்துவ சீட்டுக்காக அதிக பணம் செலவு செய்பவர்கள் உயர் கல்விக்கு பிறகு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். சேவையாற்ற முன்வர மாட்டார்கள். இந்த வழக்கில் மனுதாரருக்காக ஒரு எம்பிபிஎஸ்- பிடிஎஸ் சீட் காலியாக வைத்திருக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை ஜன.7க்கு தள்ளி வைத்தார்.
இதேபோல் நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற அருண், சவுந்தர்யா, கவுல்சயா ஆகியோருக்காகவும் தலா ஒரு எம்பிபிஎஸ் - பிடிஎஸ் சீட் காலியாக வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment