அரசு ஊழியர்கள் நான்கு கட்ட போராட்டம்: மாநில பொது செயலாளர் தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 22, 2020

அரசு ஊழியர்கள் நான்கு கட்ட போராட்டம்: மாநில பொது செயலாளர் தகவல்

 அரசு ஊழியர்கள் நான்கு கட்ட போராட்டம்: மாநில பொது செயலாளர் தகவல்


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 2021 ஜன., முதல் நான்கு கட்ட போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர்,'' என மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் செல்வம் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த தேர்தலின்போது அறிவித்தபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த அரசு மறுக்கிறது.


 மேலும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக 5068 பேருக்கு வழங்கப்பட்ட 17 பி குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்வது, அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேர் சஸ்பெண்ட்டை ரத்து செய்வது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. 



சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறுவோருக்கு காலமுறை சம்பளம் வழங்குவது, நாலரை லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவது போன்ற கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


 இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 2021 ஜன., 5 முதல் 12 வரை பிரசார இயக்கம், ஜன., 19, 20 ல் மாவட்ட தலைநகரங்களில் போராட்ட ஆயத்த மாநாடு, ஜன., 27ல் மதுரையில் மாநில அளவில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்தப்படும். 



பிப்., 2 முதல் தொடர் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். இதுகுறித்து தர்மபுரியில் நடந்த மாநில பிரதிநிதித்துவ பேரவை மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி அரசு ஊழியர்களை அழைத்து பேச வேண்டும், என்றார். மாவட்ட செயலாளர் நீதிராஜா,செயற்குழு உறுப்பினர் தமிழ் உடனிருந்தனர்.

1 comment:

  1. இப்பக்கூட இடைநிலை ஆசிரியர்களின் பிரச்சினை இடம்பெற வில்லை

    ReplyDelete