பல்கலைக்கழகங்கள் காவல் பயிற்சியையும் அளிக்கவேண்டும்: கிரண் பேடி வலியுறுத்தல்
பல்கலைக்கழகங்கள் காவல் நிலையங்களுடன் இணைந்து காவல்துறை சார்ந்த பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வலியுறுத்தி உள்ளார்.
நொய்டாவைச் சேர்ந்த அமிதி பல்கலைக்கழகம் 'பள்ளிகள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்கு புதிய கல்விக் கொள்கை' என்ற தலைப்பிலான மெய்நிகர்க் கருத்தரங்கை நடத்தியது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ''நான் ஒரு போலீஸ் அதிகாரி. ஆனால் இங்கு காவல் பயிற்சி அளிக்க சரியான அமைப்பு இல்லை. பல்கலைக்கழகங்களில் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர். ஏன் பல்கலைக்கழகங்கள் காவல் நிலையங்களுடன் இணைந்து காவல்துறை சார்ந்த பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்கக் கூடாது?
இளம் பெண்களும் ஆண்களும் உள்ளூர்க் காவல் நிலையத்துக்கு உதவலாம். காவல்துறை பயிற்சி மூலம் சாலை பாதுகாப்பு, புகார் அளிப்பது எப்படி, சமுதாயக் கட்டமைப்புக்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்பது குறித்துக் கற்றுக் கொள்ளலாம்.
முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன, அது எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது, எப்படி விசாரணை நடைபெறுகிறது, கைது என்றால் என்ன இரவுக் காவல் எப்படி இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள், தங்களின் கடமையைச் செய்யவும் உள்ளூர்ப் பிர்ச்சினைகளில் ஆர்வம் செலுத்தவும், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட கொள்கை மாற்றங்கள் வரவேண்டும் என்று காத்திருக்கக்கூடாது.
தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும். அதே நேரத்தில் படிப்பையும் கைவிட்டு விடக்கூடாது'' என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
No comments:
Post a Comment