MBBS சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆங்கிலப் பயிற்சி: நமது நண்பர்கள் அமைப்பு ஏற்பாடு
தமிழக அரசின் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர். இதுதவிர, 3 பேர் தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
இவர்கள் மருத்துவம் பயிலும்போது ஆங்கில மொழி தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக கீரமங்கலத்தில் உள்ள 'நமது நண்பர்கள்' ஆட்சிப் பணி ஆயத்த மையத்தில் இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. டிச.14-ம் தேதியில் இருந்து நடைபெற்று வரும் இப்பயிற்சியில் 9 எம்பிபிஎஸ் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். முன்னணிப் பயிற்சியாளர் க.சிவனேசன் பயிற்சி அளித்து வருகிறார்.
இதுகுறித்து க.சிவனேசன் கூறும்போது, ''பயிற்சியின் தொடக்க நாளில் ஒரு தேர்வு வைக்கப்பட்டது. அதன் மூலம் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்குத் தயாராகவில்லை என்பது தெரியவந்தது. ஆனால், அவர்கள் எளிதில் கற்றுக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாக உள்ளனர். இதையடுத்து, கடந்த 2 வாரங்களாக தினமும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பகலில் சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பின்னர், மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை வாட்ஸ் அப்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போது, ஒவ்வொரு மாணவரும் தலா 5 கேள்விகள் கேட்பர். அதற்கு மற்றவர்கள் பதிலளிப்பர்.
இதுபோன்ற பயிற்சிகள் மூலம் மாணவர்களும் ஆங்கிலத்தில் தயக்கமின்றிப் பேச, எழுத, வாசிக்கத் தயாராகி வருகின்றனர். எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடங்கும் வரை இப்பயிற்சி நடத்தப்படும். ஆங்கிலப் பயிற்சி இல்லாது இருந்தால் மருத்துவப் படிப்பின் தொடக்கத்தில் ஆங்கில மொழி பெரிய தடையாக இருந்துவிடும். இனிமேல், இந்த மாணவர்களுக்கு அத்தகைய தடை இருக்காது'' என்றார்.
No comments:
Post a Comment