ரூ.15 கோடியில் பள்ளிக் கட்டிடங்கள் திறப்பு; ஆசிரியை முல்லையின் சிகிச்சை செலவு ஏற்பு
15 கோடியே 3 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களைத் தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்ததுடன், புலிவலம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியை பி. முல்லையின் சிகிச்சைக்குச் செலவான தொகையையும் அவருக்கு வழங்கினார்.
இது தொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 15 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கான கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.
தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கட்டணமில்லாக் கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினிகள், கல்வி உபகரணப் பொருட்கள், காலணிகள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத்தொகை வழங்குதல், பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பாவக்கல் - அரசு மேல்நிலைப் பள்ளி, மேல்கொட்டாய்- அரசு மேல்நிலைப் பள்ளி, சின்னமேலுபள்ளி - அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கும்மாலபுரம் - அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 9 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர்;
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு- அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பரமத்தி - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் போதுபட்டி- அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 5 கோடியே 81 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர்;
என மொத்தம் 15 கோடியே 3 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களைத் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், ராணிப்பேட்டை மாவட்டம், புலிவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி வரும் பி. முல்லை, பள்ளியில் நடந்த விபத்தின்போது சமயோசிதமாகச் செயல்பட்டு 26 மாணவர்களை எவ்விதக் காயமும் இன்றிக் காப்பாற்றியபோது படுகாயமடைந்து, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதற்காக 14 லட்சத்து 58 ஆயிரத்து 334 ரூபாய் சிகிச்சை செலவினம் ஏற்பட்டது.
இதனைச் சிறப்பு நிகழ்வாகக் கருதி, ஆசிரியைக்கு ஏற்பட்ட சிகிச்சை செலவினத்தை வழங்கும் விதமாகத் தமிழக முதல்வர், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 14 லட்சத்து 58 ஆயிரத்து 334 ரூபாய்க்கான காசோலையை ஆசிரியை முல்லைக்கு வழங்கினார்''.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment