பயிற்சி மையத்தில் பயின்றால் தேர்வு இல்லாமல் ஓட்டுநர் உரிமம்: மத்திய அரசு பரிசீலனை
ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயின்றவர்களுக்கு தேர்வு கிடையாது என்ற விதியை அமல்படுத்துவதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை பரிசீலித்து வருகிறது.
இந்தப் பரிசீலனையை, மத்திய சாலைப் போக்குவரத்து துறை, தனது இணையத்தில் வெளியிட்டு, பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளது.
திறன் பெற்ற ஓட்டுநர்களை உருவாக்கும் வகையில், ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இருக்க வேண்டிய வசதிகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை உருவாக்க மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
இவ்வாறு உருவாக்கப்படும் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பிக்கும்போது நடத்தப்படும் தேர்வில் பங்கேற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற பரிந்துரையும் அதில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும்போது, சிறப்புப் பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும், அதனால், சாலை விபத்துகள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த பரிசீலனை மீது 30 நாள்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவிடுமாறு கோரியுள்ளது மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை.
No comments:
Post a Comment