கடந்த ஆண்டை போல படிப்படியாக உயரும் கொரோனா
''தமிழகத்தில், கடந்தாண்டு போலவே, மார்ச் முதல் படிப்படியாக தொற்று பரவுகிறது,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில், ராதாகிருஷ்ணன், ஆய்வு செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:கொரோனா தொற்றை தடுக்க, தேவையான அனைத்து வசதிகள், அரசிடம் உள்ளன. கேரளாவில், நாள் ஒன்றுக்கு, 2,000 பேர் பாதிக்கப்படுகின்றனர்.
கர்நாடகாவில், 1,000க்கும் அதிகமானோர் என, 19 மாநிலங்களில் பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது. அதில், தமிழகமும் அடங்கும்.ஏற்கனவே, தமிழகத்தில், 7,000 பேர் வரை, தினசரி பாதிக்கப்பட்டு உள்ளனர். அதை ஒப்பிடும்போது, 1,000 என்ற எண்ணிக்கையில் தான், தமிழகம் உள்ளது.
ஆனாலும், இது கவலை அளிக்கக்கூடிய செய்தி. இதை தடுக்க, பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. அதனால், நோய் தொற்று பரவாது என, பொது மக்கள், முக கவசம் அணியாமல் அலட்சியமாக இருக்கின்றனர்.
தொற்று அதிகாரிப்பு
திருமணம், பிறந்த நாள் நிகழ்ச்சி, இறுதி சடங்கு போன்றவற்றின் காரணமாக, பிப்., மாதம், தமிழகத்தில் தொற்று அதிகரித்தது.இந்த மாதம், அரசியல் சார்ந்த கூட்டங்கள் நடக்கின்றன.
இதிலும், முக கவசம் அணியாமல் பங்கேற்கின்றனர். கொரோனா நுண்கிருமிக்கு பாகுபாடு தெரியாது. பள்ளி, கல்லுாரி, அலுவலகங்கள், நிகழ்ச்சிகளில் தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இவற்றை கடைப்பிடிக்காததால் தான், மயிலாப்பூரில், ஒரு வங்கியிலும், வில்லிவாக்கத்தில் ஒரு விடுதியிலும், பலருக்கு தொற்று ஏற்பட்டது.
நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள், வீட்டு தனிமையை கடைப்பிடிப்பதை தவிர்க்கின்றனர். இதனால், மற்றவர்களுக்கும் நோய் தொற்றை, அவர்கள் பரப்புகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும், 'கோவிட் கேர்' மையம் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள், சவால் நிறைந்தவையாக உள்ளன. 2020 மார்ச் மாதம் முதல் எப்படி பரவியதோ, அதேபோன்று, படிப்படியாக தொற்று பரவ துவங்குகிறது.
மக்களின் ஒத்துழைப்பு
முந்தைய ஆண்டைவிட, தடுப்பு வழிமுறைகள் நிறைய இருக்கின்றன. சென்னையில், ராயபுரம், திரு.வி.க.நகரில், பொது மக்களின் ஒத்துழைப்புடன் தான், கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது.
அதேபோன்று ஒத்துழைப்பை, அனைத்து தரப்பு மக்களும் வழங்க வேண்டும். சென்னையில், தேனாம்பேட்டை, அண்ணாநகர், அம்பத்துார், வளசரவாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில், தொற்று பரவல் அதிகமாக உள்ளது.
ஊரடங்கு வர வாய்ப்புள்ளதா என்பதை சொல்வதற்கான அதிகாரிகள், நாங்கள் இல்லை. ஆனாலும், வதந்திகளை நம்ப வேண்டாம்.முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து, 15 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் வசூல் செய்வது, அரசின் நோக்கமில்லை. அபராதம் விதித்தல், மூன்று நாட்களில் முக கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது, 3,000க்கும் மேற்பட்ட இடங்களில், தடுப்பூசி போடப்படுகிறது. இதில், 16 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தமிழகத்திற்கு, 36 லட்சம் தடுப்பூசிகள் வந்தன; 20 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
No comments:
Post a Comment