தபால் ஓட்டு போடுவது எப்படி? கமிஷன் விதிமுறைகள் வெளியீடு
சென்னை: மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர், தபால் ஓட்டு போடுவதற்கான விதிமுறைகளை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ளார்.
அதன் விபரம்:சட்டசபை பொதுத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தலில், மாற்றுத் திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பாதிப்பு இருக்கலாம் என கருதுவோர், சுய விருப்பத்தில் தபால் ஓட்டு போடலாம்.இதற்கு, விண்ணப்பத்துடன் தேர்தல் பணியாளர்கள் வீடு தேடி வருவர். தபால் ஓட்டு போடுவதற்கான ஒப்புதல் பெற்றுச் செல்வர்.தேர்தல் நடத்தும் அலுவலர், விண்ணப்பத்தை பரிசீலித்து, தபால் ஓட்டு போட அனுமதி வழங்குவார்.தபால் ஓட்டு போடலாம் என்ற தகவல், உரிய விண்ணப்பதாரருக்கு, தொலைபேசி வழியாக தெரிவிக்கப்படும்.
குறிப்பிடும் நாள், நேரத்தில், அதிகாரிகள் வீடு தேடி வருவர்.தபால் ஓட்டு போடும் முறை குறித்து விளக்கம் அளிப்பர். தங்களின் ஓட்டுப் பதிவு செய்த சீட்டை, கவரில் வைத்து ஒட்டி, அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.ஓட்டுப் பதிவு அதிகாரிகள், வாக்காளர்களின் வீடுகளுக்கு செல்லும்போது, போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். அவர்களுடன் ஒரு மைக்ரோ அப்சர்வரும் செல்வார்.
தபால் ஓட்டுப் பதிவு முழுமையாக, 'வீடியோ'வில் பதிவு செய்யப்படும்.குழுவினர் வரும்போது வாக்காளர் வீட்டில் இல்லையெனில், முன்கூட்டியே தகவல் தெரிவித்து, இரண்டாவது முறை வருகை தருவர். அப்போதும் இல்லாவிட்டால், மீணடும் வர மாட்டார்கள்.தபால் ஓட்டு அளிக்க அனுமதிக்கப்பட்டோர், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க முடியாது.இவ்வாறு சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment