தொழில்நுட்ப கல்வியில் பெண்களின் பங்கு:ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெருமிதம்
தொழில்நுட்ப கல்வியில் அதிக பெண்கள் பங்களிப்பது, இந்தியா வளர்ந்த நாடாக உருவாகும் என்பதை பிரதிபலிக்கிறது,'' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
அண்ணா பல்கலையின், 41-வது பட்டமளிப்பு விழா, சென்னையில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில், நடந்தது. ஜனாபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தங்கப் பதக்கம் மற்றும் முதல் தரம் பெற்ற மாணவர்கள், 37 பேருக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது
சங்க காலம் முதல் தமிழகம் அறிவாற்றல் மற்றும் கற்றலில் சிறந்து விளங்குகிறது. அறிவாற்றல் தான் சிறந்த சொத்து. படிக்கும் இளைஞர்களுக்கு சரியான திசையை காட்டினால், புரட்சிகர மாற்றங்கள் ஏற்படுத்த முடியும்.தற்போதைய தேவைக்கேற்ற அறிவாற்றல், திறன் ஆராய்ச்சிகள் அடங்கிய நவீன கல்வி முறையை கொண்டுவர, புதிய கல்வி கொள்கை அமலாகிறது.இதன் வழியே ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய குழுக்களை உருவாக்க முடியும். அவர்கள் நாட்டை, வளர்ச்சியின் உச்சத்துக்கு அழைத்துச் செல்வர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படித்த, மிகவும் பழமை வாய்ந்த அண்ணா பல்கலை, பெண்களுக்கு அதிகாரமளித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த விழாவின் வழியே பட்டம் பெறும் ஒரு லட்சம் பேரில், 45 சதவீதம் பேர் பெண்கள். தங்கப் பதக்கம் மற்றும் முதல் தரம் பெற்றவர்களில், 60 சதவீதம் பெண்கள் உள்ளனர்.தொழில்நுட்ப கல்வி யில் அதிக பெண்கள் பங்களிப்பது, இந்தியா வளர்ந்த நாடாக உருவாகும் என்பதை பிரதிபலிக்கிறது
இந்திய மக்கள் அறிவாற்றலை ஊக்குவிப்பர். இதைத் தான் தமிழ் கவிஞர் சுப்ரமணிய பாரதி தன் கவிதையில், 'பூரண ஞானம் பொலிந்த நன்னாடு; புத்தர் பிரானருள் பொங்கிய நாடு' என, கூறியுள்ளார்.இன்று பட்டம் பெறும் மாணவர்கள், தங்களின் செயல்பாடுகளால் தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும். தங்களை ஆளாக்கிய குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு நன்றி கடன்பட்டவர்களாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முக்கிய விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில், பல்கலை வேந்தர் கவர்னர் பன்வாரி லால் புரோஹித், துணைவேந்தர் சுரப்பா ஆகியோர் பங்கேற்றனர்.சென்னை கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கட்டட அமைப்பியல் கல்லுாரி மற்றும் அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, தன்னாட்சி பெறாத தனியார் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், பட்டங்களை பெற்றனர்.
இந்த பட்டமளிப்பு விழாவின் வழியே, 1.04 லட்சம் பேருக்கு பட்டங்கள் வழங்க அனுமதிக்கப் பட்டது. 85 ஆயிரம் பேர் இளநிலை; 17 ஆயிரம் பேர் முதுநிலை; 2,000 பேர் ஆராய்ச்சி படிப்பு முடித்து, பட்ட சான்றிதழ் பெற தகுதி பெற்றுள்ளனர்
விழா விதிகளில் மாற்றம்
* அண்ணா பல்கலையின் பட்டமளிப்பு விழா எப்படி நடத்த வேண்டும் என, பல்கலையின் விதிகளில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, பட்டமளிப்பு விழாவில், கவர்னர், சிறப்பு விருந்தினருடன், துணைவேந்தர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பதிவாளர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் மேடையில் அமர அனுமதிக்கப்படுவர்.
* நேற்றைய விழாவில் ஜனாதிபதி பங்கேற்றதால், அவருடன், கவர்னர் மற்றும் துணைவேந்தர் மட்டும் மேடையில் அமர அனுமதிக்கப்பட்டனர். பதிவாளர் கருணாமூர்த்தி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் மேடைக்கு கீழே, முன் வரிசையில் அமர வைக்கப்பட்டனர்
நிகழ்ச்சி எப்படி நடக்க வேண்டும். மாணவர்கள் மேடையில் வந்து எப்படி பணிவுடன் பதக்கம் பெற வேண்டும் என்பதற்கான விதிகளை, ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் வகுத்து கொடுத்தனர்; அதை பின்பற்றி விழா நடந்தது
No comments:
Post a Comment