சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கும் முடிவால் வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்புவோருக்கு சிக்கல்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 297 மாணவர்கள் கடிதம்
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கும் முடிவால், வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்புவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 297 மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
நாடு முழுவதும் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்திய கல்வி அமைச்சகத்திற்கு அனுப்பிய அறிக்கையில், சிபிஎஸ்இயின் 12ம் வகுப்பு வாரியத் தேர்வை நடத்த வேண்டும் என்ற திட்டத்தை ஆதரித்துள்ளன. இருப்பினும், டெல்லி, மகாராஷ்டிரா, கோவா மற்றும் அந்தமான் - நிக்கோபார் ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டும் எழுத்து தேர்வுகளை திட்டவட்டமாக எதிர்த்துள்ளது. 29 மாநிலங்கள் சிபிஎஸ்இ விருப்பத்தேர்வு பி-க்கு முன்னுரிமை அளித்துள்ளன. இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை ஆதரிக்க ஒப்புக் கொண்டுள்ளன. ராஜஸ்தான், திரிபுரா, தெலங்கானா மாநிலங்கள் விருப்பம் ஏ-வை தேர்வு செய்துள்ளன. அதன்படி, ஏற்கனவே இருக்கும் வடிவமைப்பிற்கான விருப்பத்தை சுட்டிக்காட்டியுள்ளன. விருப்பம் ஏ-யின்படி, 19 முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நியமிக்கப்பட்ட தேர்வு மையங்களில் ஏற்கனவே இருக்கும் வடிவத்தில் தேர்வு நடைபெறும்.
அதே நேரத்தில் சிறு பாடங்களுக்கான மதிப்பெண்கள் முக்கிய பாடங்களில் மாணவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட வேண்டும். இந்த வடிவமைப்பைத் தேர்வுசெய்த மூன்று மாநிலங்கள், தேர்வு வடிவத்தில் கடைசி நிமிட மாற்றங்கள் மாணவர்களுக்கு வசதியாக இருக்காது என்ற அடிப்படையில் தங்கள் விருப்பத்தை நியாயப்படுத்தியதாகக் அறியப்படுகிறது. விருப்பத்தேர்வு பி-யின் கீழ், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நியமிக்கப்பட்ட மையங்களுக்கு பதிலாக மாணவர்களின் சொந்த பள்ளிகளில் நடத்தப்படும். மேலும் ஒவ்வொரு தேர்வும் 90 நிமிடங்களாக குறுகிய காலத்திற்கு இருக்கும். எனவே, தேர்வு விஷயத்தில் மத்திய கல்வி அமைச்சகத்தின் முடிவை எதிர்பார்த்து, மாணவர்களும், ஆசிரியர்களும், மாநிலங்களும் காத்திருக்கின்றன. இதற்கிடையே, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு வரும் ஜூலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால், உயர் கல்வி படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ள மாணவர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். தேர்வு முடிவுகள் தாமதமாகும் என்பதால், உயர்கல்வி படிக்கும் செல்லும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து சிபிஎஸ்இ வட்டாரங்கள் கூறுகையில், ‘ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, அதன்பின் தேர்வுச் சான்றிதழ் வழங்கப்படும். முன்னதாக கல்வி அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், முக்கிய பாடங்களுக்கான வழக்கமான தேர்வு அல்லது குறுகிய கால தேர்வுகளை நடத்துவது குறித்து விவாதித்தனர். 12ம் வகுப்பின் தேர்வு குறித்த இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும். இந்த நிைலயில் 12ம் வகுப்பு மாணவர்கள் சிலர், சிபிஎஸ்இக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் கடந்த 2018ம் ஆண்டில் 7 லட்சமாக இருந்தது. இப்போது மேலும் அதிகமாக இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் 2021 ஜூலை - ஆகஸ்ட் தொடக்கத்தில் தேர்ச்சி சான்றிதழை மாணவர்கள் பெற முடியாது. இதனால், மாணவர்கள் ஒரு கல்வியாண்டின் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்
ஏற்கனவே, சிபிஎஸ்இ 12வது தேர்வை ஆப்லைனில் நடத்தும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று 297 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், கடந்த ஆண்டு போலவே மாற்று மதிப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மாணவர்கள் விஷயத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளனர். கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான நேரத்தில், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டபின்னர் தேர்வை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுவதால், இவ்விஷயத்தில் மத்திய கல்வித்துறை தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றன
No comments:
Post a Comment