சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு குறித்து இரு தினங்களில் முடிவு: மத்திய அரசு தகவல்
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்து இன்னும் இரு தினங்களில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதுகுறித்த நிலைப்பாட்டை மத்திய அரசு இன்னும் அறிவிக்காமல் உள்ளது. ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும் எனத் தகவல் வெளியான நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்த பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் விடுமுறை கால சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், அடுத்த 2 நாள்களுக்குள் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்க இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் அதற்காக கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, வழக்கின் விசாரணை வருகிற ஜூன் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்ததுடன், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு கொள்கை ரீதியான முடிவெடுக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்
No comments:
Post a Comment