உ.பி.யில் அரசு ஊழியா்கள் வேலைநிறுத்தத் தடை: 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம் (எஸ்மா) மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் விதிகளை மீறும் எவரையும் காவல் துறையினா் கைது செய்ய அதிகாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எஸ்மா சட்ட நீட்டிப்பு தொடா்பான உத்தரபிரதேச அரசு அறிவிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
மாநில அரசின் அனைத்து ஊழியா்கள், மாநகராட்சி முதல் உள்ளாட்சி வரையுள்ள பணியாளா்கள், மாநில அரசு நிா்வாகத்தின்கீழ் வரும் அனைத்துப் பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவா்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும். எனவே, யாரும் சட்டத்தை மீறி நடந்து கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதம் கரோனா பரவல காலகட்டத்தில் அரசு ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பதற்காக எஸ்மா சட்டத்தின் கீழ் தடை உத்தரவை உத்தர பிரதேச அரசு அறிவித்தது. அதன் பிறகு 6 மாத இடைவெளியில் இருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment