நிவாரணத்தை அடுத்து மளிகை பொருட்கள் ரேஷனில் வழங்க உணவு துறை பரிசீலனை
சென்னை:நிவாரண தொகையை தொடர்ந்து, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவது தொடர்பாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை பரிசீலித்து வருகிறது.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், ஊரடங்கு கால பாதிப்பு நிவாரணமாக, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 4,000 ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இந்த மாதமும், அடுத்த மாதமும் தலா, 2,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. முதல் தவணையாக, 2,000 ரூபாய், வரும் 15ம் தேதி முதல், ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்து வருவதால், ஆட்டோ டிரைவர், கட்டுமான தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், வீட்டு வேலை செய்வோர் என, ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு, ரேஷனில் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க, அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலானதில் இருந்து, ரேஷன் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.வைரஸ் பரவல் குறைந்திருந்த நிலையில், முடங்கிய தொழில்கள் இயல்பு நிலைக்கு திரும்ப துவங்கின.இந்த சூழலில், கொரோனா பரவலின் இரண்டாம் அலையால், தினக்கூலி பெறும் தொழிலாளர்களின் நிலை மோசமாகி உள்ளது.
அவர்களின் குடும்ப செலவை குறைக்கும் வகையில், அரிசி கார்டுதாரர்களுக்கு, சமையலுக்கு தினமும் பயன்படுத்தக் கூடிய, 10,- 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவது தொடர்பாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை பரிசீலித்து வருகிறது.என்னென்ன பொருட்களை, எத்தனை மாதம் வழங்குவது, அதற்கான நிதி ஆதாரம் போன்றவை இறுதி செய்ததும், இதற்கான அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment