கல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள், பெற்றோர்கள் கொண்ட ஒரு குழு உருவாக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னை, அண்ணா நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
முதல்வரின் வழிகாட்டுதல்படி துறை சார்ந்த முக்கியமான பிரச்சனைகள் எது, எது என உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதா என்று நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.
அவரின் வழிகாட்டுதல்படி உலகத்தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்யப்பட்டது. அண்ணா நூற்றாண்டு நூலகம் பராமரிக்கப்படாமல் உள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நூலகத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தனி குழு அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். திங்கட்கிழமை (நாளை) தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். அந்த ஆலோசனை கூட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் வழங்குவது எப்படி என்பது குறித்தும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதற்காக கல்வி தொலைக்காட்சி நிறுத்தப்பட மாட்டாது. இன்னும் ஆக்கப்பூர்வமான பல நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டு புதுமையான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்ந்து வழங்கப்படும். கல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் பெற்றோர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி கட்டணம் தொடர்பாக நல்லதொரு முடிவை மாநில அரசு மேற்கொள்ளும். பெற்றோர்களுடைய நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment