கல்விக் கட்டணம் செலுத்தக் கட்டாயப்படுத்தக் கூடாது: பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ உத்தரவு
கரோனா கால நெருக்கடி குறைந்து இயல்பு நிலை திரும்பும் வரை மாணவா்களை கல்விக் கட்டணம் செலுத்தக் கட்டாயப்படுத்தக் கூடாது என பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) உத்தரவிட்டுள்ளது.
கரோனா காலகட்டத்தில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: கரோனா கால நெருக்கடி குறைந்து இயல்பு நிலை திரும்பும் வரை மாணவா்களை கல்விக் கட்டணம் செலுத்தக் கட்டாயப்படுத்தக் கூடாது. மாணவா்களிடம் கல்விக் கட்டணத்தை 4 தவணைகளில் வசூலிக்க வேண்டும். கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களை எக்காரணம் கொண்டும் வேலையிலிருந்து நீக்கக்கூடாது.
அவ்வாறு நீக்கப்பட்டிருந்தால் அந்த உத்தரவுகளை கல்லூரிகள் திரும்பப் பெற வேண்டும். பேராசிரியா்களுக்குரிய மாத ஊதியத்தை உரிய கட்டத்தில் செலுத்த வேண்டும் எனவும், உயா்கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
தற்போது இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில், பிற கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களை அவா்கள் வசிக்கக்கூடிய பகுதியிலுள்ள மற்ற கல்லூரிகளில் இணையதள வசதியைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதேபோன்று 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஆக.31-ஆம் தேதிக்குள் முதல் கட்ட கலந்தாய்வையும், செப்.9-ஆம் தேதிக்குள் இரண்டாம் கட்ட கலந்தாய்வையும் நடத்தி முடிக்க ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது
No comments:
Post a Comment