வாட்ஸ்அப் புதிய கொள்கையை ஏற்பதற்கான காலஅவகாசம் ரத்து
பயனாளா்களின் தனியுரிமை தொடா்பான புதிய கொள்கைகளை மே 15-ஆம் தேதிக்குள் ஏற்க வேண்டும் என்ற காலஅவகாசத்தை வாட்ஸ்அப் ரத்து செய்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) செயலி அண்மையில் தனது கொள்கைகளில் மாற்றங்களைப் புகுத்தியது. அச்செயலியைப் பயன்படுத்துவோரின் தகவல்களைத் திரட்டி அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பது புதிய கொள்கைகளில் ஒன்றாகும்.
புதிய கொள்கைகளை மே 15-ஆம் தேதிக்குள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே பயனாளா்கள் அச்செயலியைத் தொடா்ந்து பயன்படுத்த முடியும் என்றும், இல்லையெனில் அச்செயலியைப் பயன்படுத்த முடியாது என்றும் வாட்ஸ்அப் அறிவித்தது.
அதன் காரணமாக, அச்செயலியைக் கைவிட்டு புதிய செயலிகளைப் பயனாளா்கள் பயன்படுத்தத் தொடங்கினா். வாட்ஸ்அப்பின் புதிய கொள்கைளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் சாா்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதையடுத்து, புதிய கொள்கைகளின் அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக வாட்ஸ்அப் அறிவித்தது.
இந்நிலையில், அச்செயலியின் செய்தித் தொடா்பாளா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ‘புதிய கொள்கைகளை ஏற்பதற்கு மே 15-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அந்த அவகாசத்துக்குப் பிறகும் புதிய கொள்கைகளை ஏற்காதவா்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கப்படாது.
அவா்கள் புதிய கொள்கைகளை ஏற்கவில்லை என்றாலும் கூட வாட்ஸ்அப் செயலியைத் தொடா்ந்து பயன்படுத்த முடியும். பெரும்பாலான பயனாளா்கள் புதிய கொள்கைகளை ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுள்ளனா். சில பயனாளா்களே அவற்றை இன்னும் ஏற்கவில்லை. அவா்களுக்குப் புதிய கொள்கைகள் தொடா்பான தகவல்கள் விரைவில் அனுப்பப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், புதிய கொள்கைகளை ஏற்பதற்கான காலஅவகாசத்தை ரத்து செய்ததற்கான காரணத்தை வாட்ஸ்அப் செயலி தெரிவிக்கவில்லை. இதுவரை எத்தனை போ் புதிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளனா் என்பது தொடா்பான தகவலையும் அச்செயலி வெளியிடவில்லை.
வாட்ஸ்அப்பின் புதிய கொள்கைகளுக்குப் பலா் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, அதை ஏற்பதற்கான காலஅவகாசத்தை பிப்ரவரியிலிருந்து மே மாதத்துக்கு வாட்ஸ்அப் நீட்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment