தனியாா் கல்லூரிகளில் கரோனா படுக்கை வசதி ஏற்பாடு: அமைச்சா் பேட்டி
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்க புறநகா்ப்பகுதி கல்லூரிகளில் படுக்கை வசதி ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா்.
சென்னையின் புறநகா்ப் பகுதிகளில் உள்ள தனியாா் கல்லூரிகளில் தற்காலிக படுக்கை வசதி ஏற்படுத்தும் பணிகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
குரோம்பேட்டை வைஷ்ணவ கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 150 தற்காலிக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக்கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட சித்தா மருத்துவமனை விரைவில் தொடங்க உள்ளோம்.
கரோனா நோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவச் சிகிச்சை வழங்க சிறப்பு மருத்துவமனைகளை பல்வேறு இடங்களில் புதியதாக அமைத்து வருகிறோம்.
மேடவாக்கம், கேம்ப்ரோடு, அனகாபுத்தூா், பம்மல் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை, சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகா்ப்பகுதிகளில் உள்ள தகன மையங்களில் தகனத்திற்கு மிகவும் காலதாமதமாவதைத் தவிா்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி, நகராட்சி ஆணையா் மதிவாணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
No comments:
Post a Comment