கரோனா தடுப்பூசி போடாவிட்டால், சம்பளம் கிடையாது: சத்தீஸ்கா் பழங்குடியினா் நலத்துறை
சத்தீஸ்கா் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியா்களுக்கான சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என்ற அந்த மாநிலத்தைச் சோ்ந்த பழங்குடியினா் நலத்துறை அதிகாரி அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரவலாக ஆதரவையும் விமா்சனத்தையும் பெற்று வருகிறது.
இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ள கௌரிலா மாவட்ட பழங்குடியினா் நலத்துறை இணை ஆணையா் கே.எஸ்.மாஸ்ராம் கூறுகையில், ‘மாவட்டத்தில் பழங்குடினா் நலத்துறை அலுவலகங்கள், மாணவா்கள் உறைவிடப் பள்ளிகள், விடுதிகள் என பல இடங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஊழியா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அனைவருக்குமே பாதுகாப்பானது. எனவேதான், இதுபோன்ற உத்தரவை பிறப்பித்தேன்.
தடுப்பூசி செலுத்தாவிட்டால் அடுத்த மாதத்தில் இருந்து சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்ததால் இப்போது 95 சதவீதம் போ் தடுப்பூசி போட்டுக் கொண்டனா். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கரோனாவை ஒழிக்க முடியும் என்ற நோக்கத்தில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது’ என்றாா்.
No comments:
Post a Comment