நாட்டுக்கே பாடம் புகட்டும் 3 வயது சிறுமி
கோஹிமா:நாகாலாந்தைச் சேர்ந்த 3 வயது சிறுமிக்கு லேசான சளி ஏற்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக தனியாகவே மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், முதல்வர் நய்ப்யூ ரியோ தலைமையில் தேசியவாத ஜனநாயக முன்னணி கட்சி ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தின் ஸன்ஹிபோடோ மாவட்டம், காட்ஹாஷி என்ற இடத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி லிபவி. இவரது பெற்றோர், விவசாய கூலிகளாக வேலை செய்கின்றனர்.சமீபத்தில், லிபவிக்கு லேசான ஜலதோஷம் ஏற்பட்டது.
சளி, காய்ச்சல் இருந்தால், உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி அரசு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்து வருவதை அறிந்த சிறுமி, பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்தார்.பெற்றோர் வேலைக்கு சென்ற பின், வீட்டு அருகே உள்ள சுகாதார மையத்திற்கு முக கவசம் அணிந்தபடி தனியாக சென்றார்.
அங்கிருந்த டாக்டரிடம் விபரம் கூறி, பரிசோதனை செய்யும்படி கேட்டுள்ளார். சிறுமி தனியாக வந்திருப்பதை பார்த்த டாக்டர் முதலில் திகைத்தார். பின், அந்த சிறுமியின் உடல் நிலையை பரிசோதனை செய்து, புகைப்படம் எடுத்து அனுப்பினார். இந்த புகைப்படத்தை, பா.ஜ., இளைஞர் அணி மாநில தலைவர் பெஞ்சமின் யெப்தோமி, சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.
அதில், 'காய்ச்சல் வந்தால் முன்னெச்சரிக்கையாக உடல்நிலை பரிசோதனை செய்து கொள்ளவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் பெரியவர்களே அலட்சியம் காட்டும் வேளையில், சிறுமி லிபவியின் பொறுப்பான செயல், பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்' என, குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment