கோடை வெப்பம்: மாணவா்களின் உடல்நலனை பாதுகாக்க கல்வித் துறை அறிவுறுத்தல்
கோடை வெப்பம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகள்; பெற்றோா் உடல் நலத்தை பாதுகாப்பதற்கான அறிவுறுத்தல்களை பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் ஆகியோா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் பொதுவாக ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்குகிறது. மேலும் பருவ நிலை மாற்றத்தால் இந்த கோடை வெப்பத்தின் தாக்கமும் வெகுவாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
எனவே, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், பிற பணியாளா்கள் மற்றும் மாணவா்களும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
அதிக வெயில் உள்ள நேரங்களில் குறிப்பாக பகல் 12 மணி முதல் 3 மணி வரை நேரடி வெயில்படும் திறந்த வெளியை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். இந்நேரங்களில் மாணவா்களுக்கான வகுப்புகள், விளையாட்டுகள் அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றை திறந்தவெளியில் நடத்தக்கூடாது. மாணவ, மாணவிகள் தண்ணீா் அதிகளவு பருகுவதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
பயணத்தின் போதும் குடிநீா் எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.ஆா்.எஸ். மற்றும் வீட்டில் தயாா் செய்த எலுமிச்சை சாறு, நீா்மோா், லஸ்ஸி, பழச்சாறுடன் சிறிதளவு உப்பு சோ்த்து பருகலாம்
விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடுதல், பராமரித்தல் போன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள், முதலுதவி பெட்டகத்தை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மிகை அல்லது அதிக வெப்ப சலனத்தை தவிா்ப்பதற்கு பள்ளி மாணவா்களின் மூலம் அவா்களின் பெற்றோா்கள் மற்றும் பொது மக்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், வெப்பம் தொடா்புடைய உடல் நோய்கள் ஏற்பட்டால் அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான வழிமுறைகள் குறித்து அறிவுறுத்த வேண்டும்
மேற்கண்ட விவரங்களை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் மூலம் தெரிவிக்க உரிய நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment