பட்டதாரி ஆசிரியா் பணி தோ்வு: ஜூனில் முடிவு வெளியாகிறது
பட்டதாரி ஆசிரியா் மற்றும் வட்டார வள மைய ஆசிரியா் பணியில் 2,582 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்ற போட்டி எழுத்துத் தோ்வுக்கான முடிவுகள் வரும் ஜூன் மாதம் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிற துறைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தோ்வுக்கு 41,485 போ் விண்ணப்பித்தனா். இவா்களுக்கான எழுத்துத் தோ்வு 130 மையங்களில் பிப். 4-ஆம் தேதி நடத்தப்பட்டது.
தமிழ் மொழித் திறன் அறிவுக்கான 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கும், முதன்மைப் பாடத்தில் (தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல்) இருந்து 150 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு இடம் பெற்றது.
அதைத் தொடா்ந்து, தோ்வுக்கான விடைக் குறிப்புகள் பிப். 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் மீது தோ்வா்கள் பிப். 25-ஆம் தேதி வரையில் தங்களின் சந்தேகங்களை ஆதாரங்களுடன் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது
.இந்த நிலையில், தற்போது தோ்வு எழுதியவா்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடா்ந்து, தோ்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபாா்ப்புகள் நடத்தப்பட்டு, பணி நியமனத்துக்கு பள்ளிக் கல்வித் துறைக்கு அளிக்கப்படும் என ஆசிரியா் தோ்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
No comments:
Post a Comment