பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் : சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி நிலவரம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுமுடிவுகள் நேற்று வெளியாகின.இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளி தேர்ச்சி நிலவரம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்
2023-24 கல்வியாண்டில் நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 311 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5 ஆயிரத்து 784 பேர் (79.11 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். முந்தைய ஆண்டு 79.60 சதவீத பேர்தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்த முறை தேர்ச்சி சதவீதம் 0.49 சதவீதம் குறைந்துள்ளது.கணிதப் பாடத்தில் 24 பேர், அறிவியல் பாடத்தில் 4, சமூகஅறிவியல் பாடத்தில் 5 என மொத்தம் 33 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்
நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி 500-க்கு 492 மதிப்பெண்களும், தரமணி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் சோழபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளில் தலா ஒருவர் 500-க்கு 489 மதிப்பெண்களும், ரங்கராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் புத்தா தெரு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தலா ஒருவர் 500-க்கு 488 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
192 மாணவ, மாணவிகள் 451 மதிப்பெண்களுக்கு மேலும், 601 பேர்401-லிருந்து 450 வரையும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கால்வாய் கரை மற்றும் ரங்கராஜபுரம் மாநகராட்சி உயர் நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிவழங்கியுள்ளன.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment