பட்டதாரி ஆசிரியா் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியா்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியா்கள் நியமனத்தின் போது 50 சதவீத இடங்களை நேரடியாகவும், 48 சதவீத இடங்களை இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கியும், 2 சதவீத இடங்களை தகுதிபெற்ற அமைச்சுப் பணியாளா்கள் மூலமும் நிரப்ப 2007-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது
இடைக்காலத்தடை: இந்த அரசாணையின்படி, 2 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் அமைச்சுப் பணியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்காமல் பட்டதாரி ஆசிரியா்கள் நியமனம் செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘2014-2015 முதல் 2024-2025- ஆம் ஆண்டு வரை அமைச்சுப் பணியாளா்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 130 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் உள்ளதாகவும் ஆசிரியா் தகுதித் தோ்வு தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கில் அரசு தலைமை வழக்குரைஞா் ஆஜராகவுள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என வாதிடப்பட்டது
தடை நீட்டிப்பு: இதை ஏற்று வழக்கு விசாரணையை அக். 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, ஆசிரியா் தகுதித்தோ்வில் தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளா்களுக்கு நீண்ட காலமாக பதவி உயா்வு வழங்கப்படாததால், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு மனுதாரா்களின் கோரிக்கையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனக் கூறி பட்டதாரி ஆசிரியா்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டாா்
No comments:
Post a Comment